சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைவடையவுள்ளது. வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனிடையே அவருக்கு நேற்று (ஜன.20) பெங்களூரு சிறையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதல்கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், நேற்று மாலை 5.45 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையின் தண்டனை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சசிகலாவிற்கு ஆன்டிஜென் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று (ஜன.21) காலையில் மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் கவலையடைந்த சசிகலாவின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும், சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
போரிங் மருத்துவமனையிலிருந்து சசிகலா ஆம்புலன்ஸ் மூலம் விக்டோரியா மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனிடையே சசிகலாவை கேரளா அல்லது புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் கர்நாடாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
சசிகலா விடுதலையாக இருந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 27ஆம் சசிகலா விடுதலையாக இருந்த நிலையில் சசிகலாவிற்கு உடல்நலம் பாதிப்படைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பெங்களூருவில் சசிகலாவுக்குத் தொடர் சிகிச்சை!