வெண்மை புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியனின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 26) தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது.
அண்மையில், மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதார இணையமைச்சர் அஸ்வினி குமார், தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அப்லாடாக்சின் எம்- 1 (aflatoxin m1) என்ற நச்சுப் பொருள் அதிக அளவில் உள்ளதாகத் தெரிவித்தார். நச்சுத் தன்மை கொண்ட பால் விற்பனை செய்யப்படுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்ற திடுக்கிடும் தகவலையும் கூறினார்.
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அக்டோபர் 18ஆம் தேதி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில் அப்லாடாக்சின் எம்-1 என்ற நச்சுப் பொருளின் அளவு அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள பாலில்தான் நச்சுத்தன்மை அதிக அளவில் உள்ளது என கூறப்பட்டிருந்தது. இதனையே அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், "எந்தெந்த நிறுவனங்களின் பாலில் நச்சுத்தன்மை உள்ளது என ஆய்வில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் தனியார் நிறுவன பால் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரசுத்துறை நிறுவனமான ஆவின் பால் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
கடந்த காலங்களில் ஆவின் பாலில் கலப்படம் செய்யப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆய்வறிக்கை உள்நோக்கம் கொண்டதாகவும், தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு ஆய்வகங்களில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைப் பரப்பக்கூடிய நச்சுப் பொருட்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதா? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, அது போன்ற பால் மாதிரிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆய்வகங்கள் பதிலளித்துள்ளன. நாளொன்றுக்கு 155 கோடி மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், வெறும் 6 ஆயிரம் டன் பால் மாதிரிகளை மட்டும் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உயர் நிலைக்குழு அமைத்துள்ளது. அதில் கால்நடைத்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள், ஆவின் நிறுவன அலுவலர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பாலுக்கு பூனையை காவலுக்கு வைப்பதைப் போன்றது. இந்த பிரச்னையில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. குழந்தைகள் குடிக்கும் பால் பாதுகாப்பாக உள்ளதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டை பொறுத்தவரை பால் உற்பத்தியாளர்கள் தங்களது கால்நடைகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்ட மூன்று வகையான தீவனங்களை அளிக்கின்றனர்.
இதில் உலர் தீவனமாக சோள தட்டு, வைக்கோல், கடலை கொடி ஆகியனவும், அடர் தீவனமாக பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்து தரும் தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்கும் நிலையில் அடர் தீவனத்திலும், உலர் தீவனத்திலும் பூஞ்சான தாக்குதல் ஏற்பட்டு அது நச்சுதனமையாக மாறி கால்நடைகளுக்கு அளிக்கும் போது அதில் அப்லாடாக்ஸின் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தரமான தீவனங்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் - ஸ்டாலின்!