இந்தியாவில் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்று பாஜகவிற்கு தர்ம அடி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது என்பதை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை அடித்து நிரூபித்துள்ளது.
அதிமுக தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 78 லட்சத்து 30 ஆயிரத்து 520 வாக்குகள் (18.5 விழுக்காடு) மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 44.34 விழுக்காடு அதிமுக பெற்றிருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள திமுக ஒரு கோடியே 38 லட்சத்து 77 ஆயிரத்து 672 வாக்குகளுடன் 32.8 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. திமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 23.61 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
இந்தத் தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் 2.8% விழுக்காடு, பாஜக 3.33% விழுக்காடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.4% விழுக்காடு, இந்திய கம்யூனிஸ்ட் 2.4% விழுக்காடு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1.11 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 62 வாக்குகளை (1.44%) பெற்றிருந்த நோட்டா தற்போது ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 150 வாக்குகளை (1.3%) மட்டுமே பெற்றுள்ளது.