இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள சட்டமன்றப் பேரவையில் அம்மாநில ஆளுநர் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டப்போராட்டம்
தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இடையிலான முல்லைப் பெரியாறு பிரச்சனையில்
தொடர்ந்து கேரள அரசு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமலேயே அவற்றையெல்லாம் சட்டப் போராட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் காட்டியவர் ஜெயலலிதா.
அதே சமயத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெறுகின்ற போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு இடையூறுகள் அண்டை மாநில அரசுகளால் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. இதே காலகட்டத்தில் தி.மு.க.வின்
தயவிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மத்தியில் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில்தான் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை கேரளாவிற்கு தி.மு.க. தயவோடு ஆட்சி நடத்திய மத்திய காங்கிரஸ் அரசு அளித்தது.
ஜெயலலிதா எதிர்ப்பு
ஆனால், மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து ஒரு போராட்டத்தைக் கூட அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் நடத்த முடியவில்லை. ஆனால், அதை எதிர்த்து ஜெயலலிதா கடுமையாக குரல் கொடுத்ததன் காரணமாக அதனை முன்னெடுத்துச் செல்ல இயலாத நிலை கேரளாவிற்கு ஏற்பட்டது.
தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்பது மாத காலத்தில் பல்வேறு இடையூறுகளை கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கேரள வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் முதன் முறையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து, நீர்மட்டம் உள்ளிட்ட தகவல்களை பெற
கேரள அரசின் சார்பில் பொறியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பேசியது, இதனைத் தொடர்ந்து கேரள நீர்வளத் துறை முதன்மை பொறியாளர், செயற் பொறியாளர் உள்ளிட்டோர் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது என பல அத்துமீறிய நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டது.
இவற்றையெல்லாம் எதிர்த்து தி.மு.க. வலுவாக குரல் கொடுக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியை வலுப்படுத்த ஏதுவாக மரங்களை வெட்ட கேரள அரசின் வனத் துறை அனுமதி கொடுத்தவுடன், நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் தமிழ்நாடு முதலமைச்சர். அந்த அனுமதியை ரத்து செய்தது குறித்தோ, அனுமதி அளித்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்தது குறித்தோ ஒரு கேள்விகூட முதலமைச்சர் எழுப்பியதாகத் தெரியவில்லை.
மென்மையான போக்கு
தி.மு.க.வின் இதுபோன்ற மென்மையான போக்கை நன்கு அறிந்த கேரள அரசு, இப்போது ஒருபடி மேலே சென்று, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும், அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்த்தப்படக் கூடாது போன்ற வார்த்தைகளை ஆளுநர் உரையில் பக்கம் 4, பத்தி 8-ல் இடம் பெறச் செய்துள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள இந்த வாசகங்கள் உச்ச நீதிமன்றத்
தீர்ப்பினை அவமதிக்கும் செயலாகும்.
கண்டனம்
கேரள அரசின் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, கேரள அரசின் இதுபோன்ற அத்துமீறிய செயலுக்கு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முனைப்புடன் நடவடிக்கை
எடுக்க வேண்டுமென்றும், முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொள்கிறேன்.
இதையும் படிங்க : கேரள ஆளுநரின் உரை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது - அமைச்சர் துரைமுருகன்