சென்னை: உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவத்தை எடுத்துக் கொண்டு அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று (பிப். 6) டெல்லி சென்றுள்ளனர். மொத்தம் 85 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள், ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2,639 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400 பேர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க அதிமுகவின் அவைத் தலைவர் டெல்லி சென்றுள்ளார். இது ஒருபுறம் இருக்க, தங்கள் தரப்பு வேட்பாளர் பெயர் பொதுக்குழு படிவத்தில் இடம்பெறவில்லை எனவும் இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மீறியுள்ளார் எனவும் ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை பிப்.7ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற நிலையில் இரட்டை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பினரின் குற்றச்சாட்டுகளை மீறி ஈபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் பட்சத்தில் ஓபிஎஸ் தரப்பினர் தென்னரசுவை ஆதரப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏன்னென்றால் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் விரும்பவில்லை என ஓபிஎஸ் ஆதரவு வட்டாரங்கள் கூறுகின்றனர். இருந்தாலும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் இன்னும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.