திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் புதிய நியாய விலைக் கடை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் அங்குள்ள கட்சி நிர்வாகிகளின் பெயர்களை வாசித்த பின்பு, ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் செய்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்க இருந்தபோது, தங்களின் பெயர் விடுபட்டு விட்டது எனக் கூறி அமைச்சர் முன்பே அதிமுக நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ரகளையில் ஈடுபட்டவர்களை அமைச்சர் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இருப்பினம் அமைச்சரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அமைச்சர் நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து சென்றதும், மீண்டும் மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த ஊர் பொதுமக்கள் சமாதானம் செய்து வைத்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:கழிவுநீர் தேங்கியதால் ஏற்பட்ட மோதல்: ஒருவர் உயிரிழப்பு