சென்னை: திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியும் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான பொது விவாதத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் மூன்று நாள்கள் உறுப்பினர்கள் பேசினர்.
நான்காம் நாளான இன்று (ஆகஸ்ட் 19) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பொது விவாதத்தின் மீது பதிலுரை அளிக்கின்றனர்.
தனிப்பட்ட விஷயத்தை அவையில் பேசக் கூடாது
இன்றையப் பேரவைக் கூட்டத்தில், 'ஒரு முக்கியச் செய்தி அவைக்கு கொண்டுவருகிறேன்' எனப் பேசத் தொடங்கிய அவை முன்னவர் துரைமுருகன், "கொடநாடு விவகாரத்தில் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம், அதிமுகவினர் வெளியேற்றம் எனச் செய்தி வந்துள்ளது.
ஆனால் உள்பக்கம் அதிமுகவினர் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டுவர கூச்சலிட்டனர். அவைக்கு வெளியே அமர்ந்ததால் அவைத்தலைவர் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் செய்திகளில் தவறாகப் பதிவுசெய்துள்ளனர். இதற்கு அவைத்தலைவர் உரிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து, பேரவைத் தலைவர் அப்பாவு பேசுகையில், "ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என நம்புகிறவர் முதலமைச்சர். மக்கள் பிரச்சினையைப் பேசுவார் என நான் நேற்று (ஆகஸ்ட் 18) எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதித்தேன். ஆனால் அவர் தனிப்பட்ட விஷயத்தைப் பேசினார். அவர் தனிப்பட்ட விஷயத்தை அவையில் பேசக்கூடாது.
கொடநாடு... வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே
அவைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த முன் அனுமதியும் பெறாமல் பதாகைகளை அவைக்குள் கொண்டுவந்தனர். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையிலிருந்து அவர்களாகத்தான் வெளியேறினார்கள். நான் அவரை வெளியேற்றவில்லை" என விளக்கம் அளித்தார்.
கொடநாடு கொலை வழக்கில் என்னையும் சேர்க்க திமுக அரசு சதி - இபிஎஸ்
முன்னதாக நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில், கொடநாடு விவகாரத்தில் பொய் வழக்குப் போடுவதாக திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, திமுகவிற்கு எதிராகக் கோஷமிட்டனர்.
பாஜக, பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் அதிமுகவிற்கு ஆதரவாக வெளிநடப்புச் செய்தனர். கொடநாடு விவகாரம் குறித்து நேற்று பேரவையில் முதலமைச்சர் பேசுகையில், "கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தமட்டிலே, தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல.
அச்சப்படாதீர் - ஸ்டாலின்
முறைப்படி நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கத்தோடு அல்ல; முறைப்படி நீதிமன்றத்திலேயே அனுமதியைப் பெற்று நீதிமன்றத்தினுடையே அனுமதியோடுதான் இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆகவே, இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ நிச்சயமாக இல்லை. விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிலே கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் நிச்சயமாக உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் இதற்கு அச்சப்பட வேண்டிய பயமோ, அவசியமோ இல்லை" என்றார்.
இந்த நிலையில், இன்றும், நாளையும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவை நிகழ்வில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கம்