சென்னை: தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி படத்திறப்பு விழா மற்றும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் அதிமுகவினர் கலந்து கொள்ளவில்லை. கட்சி கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும், அவர்களின் விருப்பத்தை பொருத்தது.
பெயரளவில் அழைப்பிதழ்
ஆனால் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் திமுக பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் எங்களுக்கு பெயரளவில் அழைப்பிதழ் மட்டுமே அனுப்பி வைத்தனர்.
உரிய மரியாதை
கருணாநிதி படத்திறப்பு விழா நடத்த திட்டமிட்டபோதே முதலமைச்சர் என்னை அழைத்து, எதிர்க்கட்சி தலைவரை தொடர்பு கொண்டு உரிய மரியாதை அளிக்கப்படும். கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்க கூறினார்.
விருப்பம் இல்லை
ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் எந்த பதிலும் கூறாமல் சட்டப்பேரவை செயலாளரை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்காக அவரது நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன்.
மேகதாது விவகாரம்
மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற கருத்தை ஏற்கமாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல. புதியதாக பொறுப்பேற்றிருப்பதால் அவ்வாறு பேசி இருக்கலாம். கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் நடக்கிறது.
முதலமைச்சர் வெற்றி
கரோனா ஒழிப்பில் முதலமைச்சர் சற்று வெற்றி அடைந்துள்ளார். தொடர் வெற்றி அடைய முழு வீச்சில் செயல்படுகிறார்.
நதிநீர் பிரச்சினை
தமிழ்நாடு, கேரள நதிநீர் பிரச்னை தொடர்பாக கேரள நீர்ப்பாசனத் துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதன் பின்னர் தான் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ஈடில்லா ஞானத்தைத் தந்தார் குடியரசுத் தலைவர் - ஸ்டாலின் நெகிழ்ச்சி