சென்னை: பண மோசடி வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறைகள், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக பதவி அதிகாரத்தை நிரூபிக்கக் கோரும் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார்? என்பது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பணமோசடி வழக்கை எதிர்கொண்டுள்ள செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை மாற்றிய தமிழக அளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை தான் விரும்பவில்லை என தெரிவித்துள்ள சூழலில், அவர் பதவியில் நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் 164(1)-வது பிரிவின்படி, அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளதால், செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் நாடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டவிரோதமானது மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற காவலில் உள்ளவரை அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது அரசியல் சாசன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை வீழ்த்தி விடும் என்பதால், செந்தில் பாலாஜி அமைச்சராக கடமையாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும், அமைச்சர்களுக்கான எந்த சலுகைகளையும் அவருக்கு வழங்கக் கூடாது, மக்கள் வரிப்பணத்தில் அமைச்சருக்கான சம்பளம் வழங்க கூடாது எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "தர்ம ரட்சகராக அவதாரம் எடுக்கும் ஆளுநர்" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்