சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள நொச்சி குப்பத்தில் திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற கொள்கையை வரவேற்கின்றனர். கடந்த காலங்களில் 1952 தேர்தல் நடைபெற்ற போது நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த தருவாயில் சுமார் 11 கோடி மட்டுமே செலவாகியுள்ளன.
தற்போது உள்ள நிலையில் சுமார் 60 ஆயிரம் கோடி தேர்தலுக்காக செலவாகும் சூழ்நிலை உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் போது தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதிலும் பள்ளி கல்வித்துறைக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
மேலும், தேர்தல் அடிக்கடி நடைபெறுவதால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் அடிக்கடி ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து செல்வதால் அவர்களின் நேரம் விரயமாகும் அதே நேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதால் அவர்களது பயண சிரமமும் குறைக்கப்படும். 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என மு.க.ஸ்டாலினால் சொல்ல முடியாது.
இதையும் படிங்க: இந்து மதத்தை கரோனாவோடு ஒப்பிட்டு பேசிய உதயநிதி.. பொங்கி எழுந்த வானதி சீனிவாசன்!
ஏனென்றால் விலைவாசி உயர்வு, வரி உயர்வு மற்றும் தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, காவல்துறைக்கே பாதுகாப்பில்லை இவற்றை மக்கள் உணர்ந்துள்ளனர். திமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். எங்கு பார்த்தாலும் சாலைகளில் தேனும், பாலும் ஓடுவது போல மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் பேசுகின்றனர்.
நாட்டையே கொள்ளை அடித்திருப்பதால் திமுகவிற்கு பயம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தல் வரும்போது பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். திமுக எப்போதும் பாதியிலேயே மக்களிடம் செல்வாக்கை இழப்பது வாடிக்கையாகி உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் பாஜக கூட்டணி உள்ளது. ஓபிஎஸ் மூலம் எந்த தாக்கமும் ஏற்படாது. ஓபிஎஸ் தெருமுனை கூட்டம் கூட நடத்த வக்கில்லாத நிலையில், அவர் எப்போது பொதுக்கூட்டத்தை நடத்துவார்” என கூறினார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினின் ‘சனாதன தர்மம்’ கருத்து.. இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு!