தேர்தல் விதிமுறைகள் படி உரிய அனுமதி பெறாமல் நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிட்டது, ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக திமுக மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரி அதிமுகவின் சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனுக்களை கொடுத்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தேர்தல் நடத்தை விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், திமுகவினர் இந்த விதிமுறைகளை மீறி வருகிறார்கள். குறிப்பாக இறந்து விட்டவர்கள் அல்லது ராணுவத்தினர் உள்ளிட்டோரை மையப்படுத்தி பரப்புரை மேற்கொள்ளக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி என அனைத்தையும் வெளிப்படுத்தி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பரப்புரையில் ஈடுபடுகின்றனர். இதுவும் தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் எனவே மேற்படி விதிமுறைகள் மீறி செயல்பட்டுள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் 3 பேர் புகார்கள் கொடுத்துள்ளோம். புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறோம் என்று கூறினார்.