சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 23 இடங்களில் போட்டியிடும் என, அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நேற்று(பிப்.26) சட்டப்பேரவையில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று(பிப்.27) அதிமுக- பாமக இடையேயான தொகுதி ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது. மேலும், எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாமக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்தோர் தனியார் நட்சத்திர உணவகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணியில் பாமகவைத் தவிர எந்த எந்த கட்சிகள் இணையும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கொடுத்ததால் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துப் பெற்றிருப்பதாகவும், இதனால், தங்களுடயை பலம் குறையாது எனவும் பேசினார்.
மேலும், மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 40ஆண்டுகாலப் போராட்டத்திற்கு முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்ட அன்புமணி, தங்களுடைய கூட்டணிக் கட்சிகள் இந்தத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக அமர்வார் என்றார்.
இதையும் படிங்க: 40 ஆண்டுக்கால போராட்டம் - வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் அறிக்கை