சென்னை: வருமானத்திற்கு அதிகமாக 131 விழுக்காடு சொத்துக்களை சேர்த்ததாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தவைவரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை தலைவருமான இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இளங்கோவனின் வீடு, அலுவலகங்கள் என சென்னை, திருச்சி உள்ளிட்ட 26 இடங்களில் இன்று (அக்.22) சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 5ஆவது குறுக்கு தெருவில் இளங்கோவனின் தொழில் பங்குதாரரான பரிபூரணம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. அப்போது அங்கு வந்த அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் உள்ளே செல்ல முயன்றார். ஆனால் அவரை காவல்துறையினர் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
மறைமுக தேர்தல் - மீடியாவை திசைதிருப்ப ரெய்டு
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாபு முருகவேல், " மானிய கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை என்று விமர்சித்ததற்காக எஸ்.பி வேலுமணி வீட்டிலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறியதற்காக எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக கே.சி வீரமணி வீட்டிலும், வாக்கு எண்ணிக்கையின் போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திமுகவினர் ஏவுதலின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
குறிப்பாக இன்று மறைமுக தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது மீடியாவை திசைதிருப்பவதற்காக இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. திமுகவில் உள்ள 18 முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, உத்தமர்கள் போல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது கேளிக்கையாக இருக்கிறது.
திமுகவினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபடாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
மேலும் பேசிய அவர், இந்த இல்லத்தில் உரிமையாளர் இல்லாத போது சோதனை நடப்பதாகவும், விஜயபாஸ்கரின் குடும்பத்தினருக்கு கரோனா இருக்கும் போது சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. முறைகேடாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக அரசியல் எதிரிகள் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரண வழக்கு - மீண்டும் விசாரணை தொடக்கம்!