சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் (MBBS) இடங்களில் மாணவர்கள் சேர்ப்பதற்கான கலந்தாய்வினை நடத்துவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இன்று (அக்.31) அனுமதி அளித்துள்ளது. மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள, 156 எம்பிபிஎஸ் இடங்களில் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் சேர்வதற்கு புதியதாக அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும் , நவம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் 105 கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 14, 600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8316 இடங்களும், நிர்வாக ஒதுககீட்டில் 2032 இடங்களும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது.எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்தப் பின்னர் அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 13 இடங்களும், தனியார் பல்கலைக் கழகங்களில் 4 இடங்களும் என 17 இடங்கள் காலியாக உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் உள்ள 12 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் , அரசு மருத்துவக்கல்லூரிகள் ஆகியவற்றில் 4172 இடங்கள் நிரப்புவதற்கு தேசிய மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவிற்கு அனுமதிக்கப்பட்டன. அதில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4 சுற்றுக் கலந்தாய்வும் முடிவுற்ற நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 50 இடங்களும் காலியாக உள்ளது.
இந்த நிலையில் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு, எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்து, அவர்கள் சேர்வதற்கான காலக்கெடு அக்டோபர் 3ஆம் தேதி என மத்திய மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே அவர்கள் அனுமதி தரும் வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களை சேர்க்க முடியாது என அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அனுமதி வழங்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் அருணலதா இன்று கூறியுள்ளதாவது, 'மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசு சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியாவிற்கு எழுதிய நேர்முக கடித்ததின் அடிப்படையில் 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படும்.
அக்.31 முதல் நவ.7 கலந்தாய்வு: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 16 மருத்துவ இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 மருத்துவ இடங்களும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 மருத்துவ இடங்களும் காலியாக உள்ளது. இதற்கான கலந்தாய்வினை தேசிய மருத்துவ ஆணையம் 31.10.2023 முதல் 7.11.2023 வரை அகில இந்திய கலந்தாய்வினை நடத்துகிறது. https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாநிலத்தில் உள்ள 17 இடங்களுக்கு நவ.7 முதல் 15 வரை கலந்தாய்வு: அகில இந்திய அளவில் காலியாக உள்ளன 156 எம்பிபிஎஸ் இடங்களில், தமிழ்நாட்டில் 69 இடங்கள் காலியாக உள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் 17 மருத்துவ இடங்களும் காலியாக உள்ளன. மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 7.11.2023 முதல் 15.11.2023 வரை நடைபெறும். எனவே மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை பார்த்து அறிந்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க பிரத்யேக இணையதம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!