சென்னை: கடந்த ஜூன் 23 அன்று சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர், ‘ஒற்றைத்தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதியிலேயே வெளியேறினர்.
இதனால், தற்போது வரை அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பரபரப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நேற்று (ஜூன் 27) ஈபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்வாறு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஓபிஎஸ்சுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. அதேநேரம், இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினரை ஓரம் கட்டுவதற்கு பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஈபிஎஸ் தரப்பினர் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறக்கூடிய பொதுக்குழுவுக்கு இடத்தை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டனர்.
அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாக பொதுக்குழு என்றால், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வந்தது. தற்போது, சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள விஜிபி இடத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். எனவே, இந்த இடத்தை தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவை வேற ஒரு இடத்தில் மாற்றி அமைப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 27) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.
மற்றொருபுறம், இபிஎஸ் தரப்பில் அதிக எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவு இருப்பதால் பொதுக்குழுவை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகின்றனர். தற்போது, இபிஎஸ் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்கு வருமாறு மிரட்டல் - துணை நடிகை புகார்