சென்னை: தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறையின் வளர்ச்சிக்கு அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகின்ற ஜன.7, 8 ஆகிய இரண்டு நாட்கள் 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' (Global Investors' Meet 2024) நடைபெற உள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடுகளை மிஞ்சும் வகையில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவு முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்களும் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றும் விதமாக 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கு உயர்த்த வேண்டும் என்ற ஒரு லட்சிய இலக்கை நிர்ணயத்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இந்த நோக்கத்திற்காக தொழில்துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் வரும் ஜன.7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருப்பதாகவும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து பரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவு..!
அந்த வகையில், பிரபல தனியார் நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் (Adidas) சீனாவிற்குப் பிறகு ஆசியாவிலேயே முதன்முறையாக இந்தியாவில் தனது திறன் மையத்தை நிறுவ உள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் சென்னையில் தனது திறன் மையத்தை நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அடிடாஸ் நிறுவனம் தனது காலணி, ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி பிரண்டாக செயல்படுகிறது.
அடிடாஸ் நிறுவனம் சீனாவை தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளில் திறன் மையங்களை கொண்டு உள்ளது. ஜெர்மனியில் உள்ள பவேரியாவை தலைமையிடமாக கொண்டுள்ள அடிடாஸ் நிறுவனம், இந்தியாவில் தனது முதல் உற்பத்தி திறன் மையத்தை உருவாக்க உள்ளது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் உருவாக இருக்கும் இந்த மையத்திற்கு அகில் கபூர் பணியாற்ற உள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகின்ற ஜன.7, 8 தேதிகளில் சென்னையில் நடைபெறுகின்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோத மணல் விற்பனை வழக்கு; தனியார் பங்குதாரர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!