சென்னை : தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான, பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று பல வெற்றி சாதனைகளை புரிந்து காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறை விளையாட்டு வீரர்கள் ஹரியானா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68ஆவது அகில இந்திய காவல் துறை மல்யுத்த குழு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பதக்கங்களை பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த வெற்றிக்காக தமிழ்நாடு அரசு பரிசு தொகை அளித்து ஊக்குவித்துள்ளது.
பதக்கம் வென்ற ஆயுதப்படை காவல்துறையினர்
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் அனுராதா பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்று ஐந்து லட்சம் ரூபாய் பரிசு பெற்றுள்ளார். மேலும் காவலர்கள் சரத்குமார், வினோத், தலைமைக் காவலர் அமுதா, அர்ஜுன் ஆகியோர் வெங்கலம் பதக்கம் பெற்றுள்ளனர்.
போட்டிகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த் முரளி வாழ்த்துகள் கூறினார். மேலும், ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரிசு தொகை காசோலையினை வழங்கி மேலும் பல தேசிய, பன்னாட்டு போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆயுதப்படை காவல் துறையினர் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். 700 ஆயுதப்படை காவல் துறையினருக்கு இதுபோன்ற 36 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.
அனுராதா அடுத்த இலக்கு
தங்கம் வென்ற சார்பு ஆய்வாளர் அனுராதா இந்திய நாட்டின் சார்பாக நேபாளத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியா நாட்டு சமோவா தீவில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தற்போது ஹரியானாவில் நடைபெற்ற காவல் துறை மல்யுத்த குழு போட்டியில் பங்குபெற்று 220 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பளுதூக்குதல் போட்டியில் பங்குபெற்று இதுவரை ஒன்பது தங்க பதக்கங்களை வென்றுள்ள அனுராதா அடுத்ததாக காமன்வெல்த் போட்டிக்காகவும்,அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காகவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: எந்த ஒரு பணிக்கும் முழு முயற்சி வேண்டும் - ஓதுவார் சுஹாஞ்சனா