சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையின் மோப்ப நாய் பிரிவில் ஏற்கனவே 3 மோப்ப நாய்கள் இருந்தன. அதில் போதைப் பொருளை கண்டுபிடிக்கும் நிபுணத்துவமாக செயல்பட்ட இராணி என்ற மோப்ப நாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டது.
அந்த இடத்தை நிரப்புவதற்கும், கூடுதலாக மோப்பநாய் பிரிவவை விரிவுபடுத்துவதற்காகவும் புதிதாக இரண்டு மோப்ப நாய்களை சுங்கத்துறை பிரிவில் சேர்க்க, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, புதிதாக ஒரு வயதுடைய இரண்டு மோப்ப நாய்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு வந்தன. அந்த இரண்டு மோப்ப நாய்களும் பஞ்சாப் மாநிலம் அட்டரியில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு அந்த இரண்டு மோப்ப நாய்களும் 9 மாதங்கள் சிறப்பு பயிற்சிகள் பெற்றன. அந்தப் பயிற்சியை முடிவு செய்த அந்த இரண்டு மோப்ப நாய்களும், தற்போது சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்பநாய் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்பநாய் பிரிவில் உள்ள மோப்ப நாய்களின் எண்ணிக்கை, இரண்டு மோப்ப நாய்களில் இருந்து 4ஆக உயர்ந்துள்ளன.
புதிதாக வந்துள்ள இரண்டு மோப்ப நாய்களில் ஒன்று, போதைப் பொருட்கள் கடத்தலை கண்டுபிடிப்பதில் அதிகம் நிபுணத்துவம் வாய்ந்தது. மற்றொரு மோப்ப நாய், சட்ட விரோதமாக கடத்தி வரப்படும் வன உயிரினங்கள் மற்றும் அபாயகரமான வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் போன்ற கடத்தல் பொருட்களை கண்டுபிடிக்கும் நிபுணத்துவம் வாய்ந்தது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் மோப்பநாய் பிரிவு இனிமேல் மேலும் சிறப்பாக செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், போதைப் பொருள், வெடி மருந்து உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்கள் அபூர்வ வகை வன உயிரினங்கள், மின்சாதனப் பொருட்கள், புகையிலை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்கள் போன்றவைகளை மோப்பம் பிடித்து, கடத்தல் ஆசாமிகளை பிடித்துக் கொடுத்து விடும் என்று சுங்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 1964ல் தனுஷ்கோடியில் நடந்தது என்ன? சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை..!