சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து பூதாகரமாக வெடித்த நிலையில், அவரது தலையை கொண்டு வந்த 10 கோடி ரூபாய் வழங்குவதாக உத்தரபிர தேசத்தை சேர்ந்த சாமியார் தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் மலேரியா, டெங்கு, கோவிட் போன்ற நோய்களை எப்படி ஒழித்தோமோ அதுபோல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்து நாடு முழுவதுமாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் பாஜகவினரும், இந்து அமைப்புகளும் தொடர்ந்து கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருவதோடு, உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரி புகார் அளித்தும் வருகின்றனர்.
மேலும் அயோத்தி, தபஸ்வி கன்டோன்மென்ட்டைச் சேர்ந்த ஜகத்குரு பரமன் ஆச்சார்யா, "டெங்கு, மலேரியா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக தலைவரின் மகன் என்ன தைரியத்தில் கூறியிருக்கிறார்?" எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன், உதயநிதியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது போஸ்டர்களை கிழித்து, தீயை வைத்து எரித்துள்ளார்.
தொடர்ந்து, உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்குவதாகவும். அப்படி யாராலும் உதயநிதியின் தலையை வெட்ட முடியாவிட்டால், தானே அதைச் செய்வதாகவும் அறிவித்தார். இது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முகாம் மற்றும் குறிஞ்சி இல்லத்திற்கும், நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கும் கூடுதலாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் வழக்கமாக மூன்று போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நிலையில் தற்போது உதவி ஆய்வாளர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் நீலாங்கரைப் பகுதியில் உள்ள இல்லத்திலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "என் தலைக்கு ரூ.10 கோடியா... பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே என் தலையை சீவிக் கொள்வேன்" - உதயநிதி ஸ்டாலின்!