சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சைக்காக, ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய 250 படுக்கைகள் கொண்ட கோவிட் உள்நோயாளிகள் பிரிவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (ஆகஸ்ட் 21) பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள டவர் 1-இல் நேற்று ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் கொண்ட கோவிட் உள்நோயாளிகள் பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இம்மையத்தில் 250 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்பட, 500 படுக்கை வசதிகள், 100 வென்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் ((High Flow Oxygen Canula) உள்ளன. மேலும், கூடுதல் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டியும் (Liquid Oxygen Tank 20 Kilo Litre Density) நிறுவப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும் ஒவ்வொரு கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்சிஜனும், 835 கியூபிக் மீட்டர் வாயு நிலை ஆக்சிஜனாக மாறக்கூடிய தன்மை வாய்ந்தது. இதனால், எவ்வித தங்கு தடையுமின்றி தேவைப்படும் அளவிற்கு கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
மேலும், 250 மருத்துவர்கள், 400 செவிலியர்கள், 400 மருத்துவம் சார்ந்த பணியாளர்களுடன் சிறப்பாக செயல்படும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கோவிட் சிகிச்சை மையத்தின் மூலம், இதுவரை புறநோயாளிகளாக 21,000 நபர்களும், உள்நோயாளிகளாக 15,100 நபர்களும் சிகிச்சை பெற்று, 13,600 நபர்கள் குணமடைந்துள்ளனர். அதேபோல் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளும் இங்கு அளிக்கப்பட்டு வருகின்றன’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைவு!