சென்னை: நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக, இன்று (ஜூலை 20) தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரளித்த பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த நான்கு நாள்களாக எனது ட்விட்டர் பக்கத்தில், வழக்கத்திற்கு மாறாக பல்வேறு செயல்பாடுகள் இருந்தன. டெல்லியிலிருந்து வந்த பிறகு, எனது ட்விட்டர் பக்கத்தை இயக்க முடியவில்லை.
ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து புகார்
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்குப் புகார் அளித்தேன். அதற்கு பாஸ்வேர்டை (கடவுச்சொல்) மாற்றியதால் ஏற்பட்ட பிரச்சினை என ட்விட்டர் நிறுவனம் பதில் அளித்தது. ஆனால், கடவுச்சொல் மாற்றப்பட்ட பிறகும் தனது ஈமெயில் ஐடியை பதிவுசெய்ய முடியாத நிலையே இருந்தது. அதன் பின்புதான் எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தெரியவந்தது.
எனது ட்விட்டர் பக்கத்திலிருந்து சிலருக்குப் புகைப்படங்களும், ட்வீட்டுகளும் சென்றிருக்கின்றன. இந்நிலையில் இன்று (ஜூலை 20) காலை எனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள அனைத்து ட்வீட்டுகளும் அழிக்கப்பட்டிருந்தன.
தற்போது நான் பாஜகவில் பதவி வகித்துக் கொண்டிருக்கும் நிலையில், என்னுடைய ட்விட்டர் பக்கத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவைச் சந்தித்துப் புகார் அளித்தேன்.
எந்த ஒரு லாபமும் கிடையாது
புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கடந்தாண்டு எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது, தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. பெகாசஸ் வைரஸ் மூலம் எந்தச் சமூக வலைதள கணக்குகளையும் ஹேக் செய்ய முடியாது.
குறிப்பாக ராகுல் காந்தியின் சமூக வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ராகுல் காந்தியின் சமூக வலைதளப்பக்கத்தை ஹேக் செய்வதால், பாஜகவுக்கு எந்தவித லாபமும் கிடையாது.
இந்தியாவில் எட்டு ஆளுநர்கள் நியமனத்தில் பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு இல்லை என்றே தெரிவித்தேன். நான் எந்தவித பதவியும் எதிர்பார்க்கவில்லை, தற்போதுதான் பாஜகவில் இணைந்துள்ளேன்.
கவர்னர் ஆகும் அளவிற்கு எனக்கு வயதாகவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி” என்றார்.
இதையும் படிங்க: டெலிபோன் ஒட்டுக்கேட்பு- நீதி விசாரணை கோரும் காங்கிரஸ்!