சென்னை: நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மனுசூர் அலிகான் சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்து சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் த்ரிஷா அவரது சமூகவலைத்தளப்பக்கத்தில் வன்மையான கண்டனங்களை பதிவு செய்தார்.
இதையடுத்து பெரும்பாலான தமிழ் சினிமா நடிகைகளும், நடிகர் சங்கமம் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மன்சூர் அலிகான் தரப்பிலிருந்து "நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது" என திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தநிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி, டிஜிபிக்கு புகார் கடிதம் ஒன்றும் அனுப்பிருந்தது.
அதன் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை பாலியல் ரீதியாக பேசுதல், கொச்சைப்படுத்தும் வகையில் பேசி தற்கொலைக்கு தூண்டுதல் என இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரடியாக ஆஜராகி அவரது விளக்கங்களை அளித்தார்.
மேலும் த்ரிஷா குறித்து தவறுதலாக பேசியதற்கு மன்னிப்பு கோரும் வகையில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்த மன்னிப்பு கடிதத்தை ஏற்று நடிகை த்ரிஷாவும் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் சூசகமாக தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த விவகாரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு சட்ட ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட த்ரிஷா தரப்பிலிருந்து, அவரது விளக்கங்களை கேட்க பலமுறை அவரை போலீசார் தொடர்பு கொண்டும் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போலீசார் நடிகை த்ரிஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கங்களை நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நடிகை த்ரிஷா கொடுக்கும் விளக்கங்களை பொருத்தே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை அனுப்பிய கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில் கடிதம் அனுப்பி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே மன்னிப்பு கோரிய காரணத்தினால், அவர் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் என த்ரிஷா பதில் அளித்து இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட ஆலோசகருடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டுதல்! வீரட்டானேஸ்வரர் கோயிலில் தொண்டர்கள் கூட்டு பிரார்த்தனை!