தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் நடிகை சினேகா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்தவர். சினேகா தற்போது பனையூர் பகுதியில் தனது கணவர் நடிகர் பிரசன்னாவுடன் வசித்துவருகிறார்.
இந்த நிலையில், சினேகா தனியார் சிமென்ட் நிறுவனம் ஒன்று தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "எனது கணவர் பிரசன்னாவின் நண்பர் பிரசாந்த் என்பவர் மூலம் ஆந்திராவைத் தலைமையிடமாகக் கொண்டுசெயல்படும் 'கோலேரி சிமென்ட்ஸ்' என்ற நிறுவனம் குறித்து தெரியவந்தது.
பிரசாந்த் அந்த நிறுவனத்தில் 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் நிறுவனத்தில் தயார் செய்யப்படும் சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வரை லாபம் பெறலாம் என நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீ ராஜ் என்பவர் தெரிவித்ததாகவும் தனக்குத் தெரிவித்தாக பிரசாந்த் எங்களிடம் கூறினார்.
எனவே கடந்த மே மாதம் ஸ்ரீ ராஜ் மூலம் ஆந்திர சிமென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம். 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு, அந்த முதலீட்டிற்கு மாதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டித் தருவதாக எனக்கும் (சினேகா) - ஆந்திர சிமென்ட் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் ஒப்பந்தத்தின்படி மாதம் லாப பணத்தைத் தராமலும் மேலும் முதலீடு பணத்தைத் திருப்பிக் கேட்டால் தராமல் ஏமாற்றிவந்தார்" எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சினேகா நவம்பர் 16ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் சினேகாவின் இல்லம் கானத்தூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் இருப்பதால் தற்போது அந்த புகார் கானத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
முதற்கட்டமாக சிமென்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீ ராஜுக்கு அழைப்பாணை அனுப்பி கானத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளனர்.