சென்னை: போரூரில் இருந்து குன்றத்தூர் சென்ற அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பஸ்சின் படிக்கட்டு மற்றும் மேற்கூரையின் மீது பயணம் செய்த மாணவர்களை சினிமா நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் பஸ்ஸை வழி மறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரை அவதூறாக பேசிவிட்டு மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்டார்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மாங்காடு போலீசார் இன்று (நவ.4) காலை சென்று ரஞ்சனா நாச்சியாரை கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இவர் மீது அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், மாணவர்களை தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து அவரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இன்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ரஞ்சனா நாச்சியாரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
ரஞ்சனா நாச்சியாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து செல்லும்போது, அங்கு பாஜக நிர்வாகிகள் பலர் கூடியிருந்தனர். அப்போது, காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த ரஞ்சனா நாச்சியார் கட்சி நிர்வாகிகளை பார்த்து கட்டை விரலை உயர்த்தி வெற்றி சின்னம் என்பதைப் போல, காட்டிவிட்டு போலீஸ் வாகனத்தில் ஏறிச் சென்றார்.
ரஞ்சனா நாச்சியார் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதால், காலை முதல் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவரது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.