சென்னை: நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் திருடு போனதாக கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம், லேப்டாப், கேமரா, செல்போன் உள்ளிட்டவற்றை திருடிவிட்டதாக சந்தேகிப்பதாகவும், அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார், சுபாஷ் சந்திர போஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே நடிகை பார்வதி நாயர் தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாக சுபாஷ் சந்திரபோஸும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தான் அளித்த புகார் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தனது புகைப்படத்தை வெளியிட்டும், செல்போனில் தொடர்பு கொண்டும் சுபாஷ் இழிவாகப் பேசுவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கடந்த வாரம் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், சுபாஷ் சந்திரபோஸை புதுக்கோட்டையில் வைத்து நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிறகு சென்னை அழைத்து வந்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'நடிகை பார்வதி பொய்யான தகவலை பரப்புகிறார்' - ஆதாரம் காட்டிய சுபாஷ் சந்திரபோஸ்!