சென்னை:பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்க இருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று(நவ-14) மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து எந்த விவரங்களும் கிடைக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரின் மொபைலும் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டு வருவதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். சுதாகர் தெரிவித்தார்.
தற்போது அவர் எங்கிருக்கிறார் என அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தெரியவில்லை எனவும், அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:நடிகை மீரா மிதுன் மிஸ்ஸிங்? லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்!