அழகி போட்டி நடத்த ஏற்பாடு செய்து, பின்னர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாகவும், இதற்காக கொடுத்த 50 ஆயிரம் ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக, ரஞ்சித் பண்டாரி என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் எனக் கூறி, மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
அதில், தொழில் போட்டி காரணமாக தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தேவைப்படும்போது விசாரணை அலுவலர்கள் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினர்.