சென்னை: இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களுக்கு இசை அமைத்துள்ளார். டும் டும் டும், காதலா காதலா, உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட படங்களில் இவரது பாடல்கள் இப்போது வரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளது.
இந்த நிலையில் இவர் அவ்வப்போது, இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவரது இசை நிகழ்ச்சி திருச்சியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, தற்போது மலேசியாவில் 'டும் டும் டும்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.
இதில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பாடகர்கள் சிலர் பாட உள்ளனர். மேலும் இசை அமைப்பாளர் இளையராஜா, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நடிகர் சதீஷ் மற்றும் பிரியங்கா, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று(அக்.06) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, நடிகை மானு, நடிகர் சதீஷ், பாடகி பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகை மானு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நான் எனது சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இயக்குனர் சரண் மற்றும் நடிகர் விவேக் இருவரும் தான், என்னை நடிக்க அழைத்து வந்தனர்.எனக்கு அப்போது சினிமா குறித்த புரிதல் இல்லாதால், அதன்பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. ஆனாலும், எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. நான் இப்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சினிமாவுடன் தொடர்பில் தான் இருக்கிறேன்.
இயக்குனர் மோகன் ராஜா நடித்த 'என்ன சத்தம் இந்த நேரம்' என்ற படத்தில், கடைசியாக நடித்துள்ளேன்" என்றார். அதைத் தொடர்ந்து, நடிகர் அஜித் பற்றிய கேள்விக்கு, "அஜித் மிகவும் நல்ல மனிதர், பண்பாளர். அவருடைய இந்த உயரத்திற்கு காரணம் அவரின் மனிதநேயம் தான். அவர் இன்னும் உயரத்திற்கு போக வேண்டும்" என்று தெரிவித்தார்.
நடிகை மானு சரண் இயக்கிய காதல் மன்னன் படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் இவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அந்தப் படததில், இவரது திலோத்தமா கதாபாத்திரம், அனைவரது நெஞ்சிலும் நீங்கா இடத்தைப் பிடித்தது. அப்படத்தில் இடம்பெற்ற 'உன்னை பார்த்த பின்பு நான்' என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அதன் பிறகு இவர் ஏனோ திரைப்படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது கார்த்திக் ராஜா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: "இனி எந்த தயாரிப்பாளருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது" - கர்நாடகா விவகாரத்தில் நடிகர் சித்தார்த் வேதனை!