சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். இன்று அதிகாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுள்ளார்.
விஜயகாந்த் திரையுலக பாதை: மதுரை மாகாளிபட்டியில் தனது அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்ட அவர், சினிமா வாய்ப்பு தேடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். அப்பொது முன்னனி நடிகராக இருந்த ரஜினிகாந்தை போல் ஹேர்ஸ்டைலும் முகவெட்டும் கொண்ட விஜயகாந்த் ரஜினிக்கு தம்பியாக ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில் தான் முதன்முதலில் நடித்தார். ‘இனிக்கும் இளமை’ படத்தில் அவர் ஏற்ற வில்லன் காதப்பாத்திரத்தின் மூலம் அவர் விஜய்ராஜில் இருந்து, விஜயகாந்தாக மாறினார்.
விஜயகாந்த் நடித்த முதல் ஐந்து படங்கள் அவருக்கு சரிவர கைகொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து, ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் சூப்பர் ஹிட் ஆனது. இதன் பிறகு விஜயகாந்த் தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார். விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், உழவர் மகன், புலன் விசாரணை ஆகியவை வெள்ளி விழா கண்டன.
ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, இருவருக்கும் கடுமையான டஃப் கொடுத்தவர் விஜயகாந்த். ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் அனைவருக்கும் 100வது படம் சறுக்கியபோது, விஜயகாந்தின் 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்தாக மக்களால் அழைக்கபட்டார்.
153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், ‘செந்தூரப்பூவே’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். மேலும், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக போராட்டங்கள்: 2002ஆம் ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்தினார். அதன் பிறகு, ஈழத் தமிழர் பிரச்சனைகள் போன்ற தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளின் போது அனைத்து நடிகர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்தி தமிழக மக்களின் கவனத்தை ஈர்ததார்.
நடிகர் சங்க தலைவர்: நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட போது, வெளிநாடுகளில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலைவிழா என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். மேலும், பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
2000ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றதுக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அவரது அரசியல் வருகைக்கு அஸ்திவாரமாக அமைந்தது.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம்: தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை 2005ஆம் ஆண்டில் விஜயகாந்த் தொடங்கினார். தமிழகத்தில் இருந்த திமுக, அதிமுக என திராவிட கட்சிகள் இடைய ஒரு புதிய மாற்றாக தேமுதிக அமைந்தது.
இரண்டு கட்சிகள் மட்டுமே என்று இருந்த இடத்தில், திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக வந்திருப்பதாக விஜயகாந்த் அறிவித்திருந்தார். மேலும், 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டார். தனக்கென்று தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களை கொண்டிருந்தார்.
கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டவர், விருதாச்சலம் தொகுதியில் அபார வெற்றிபெற்றார். அதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வந்த விஜயகாந்த், 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று சட்டசபை எதிர்கட்சி தலைவராக, அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடன் துணிச்சலாக வாதம் செய்தார்.
ஆனால், அதன் பின் கூட்டணி அரசியலில் ஈடுபட்டதால் தேமுதிகவுக்கு கிடைத்த வந்த ஆதரவு சரிய தொடங்கியது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் 7.9% வாக்கு சதவீதமும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் 5.1% வாக்கு சதவீதம் பெற்றது தேமுதிக. அடுத்து நடைபெற்ற 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் 2.4% வாக்குகளும், 2019ஆம் அண்டு மக்களவைத் தேர்தலில் 0.15%, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் 0.43% வாக்குகள் பெற்றது.
சினிமா தாண்டி, ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையும் விஜயகாந்த் தொடர்ந்து செய்து வந்தார். தன்னை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனம் படைத்தவர் என்று அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் பலரும் இன்று வரை சொல்வதை பார்க்கமுடியும்.
படப்பிடிப்பு தளங்களில் முன்னனி நடிகர்களுக்கு என்ன சாப்பாடோ அதுவே அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களுக்கு தரப்பட வேண்டும் என்ற திட்டத்தை தனது படங்களின் படப்பிடிப்பின்போது கொண்டு வந்தவர்.
இப்படி, சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும் அரசியலில் தனி முத்திரை பதித்த விஜயகாந்த்தின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே பேரிழப்பு.
இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!