சென்னை: நடிகர் விஜய் பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (ஜூலை 11) குறிப்பிட்ட சில மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதற்கு முன்னதாக விஜய் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு பனையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அக்கரை ஜங்ஷன் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிற விளக்கு எரிந்ததால் அனைத்து வாகனங்களும் நின்று கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், விஜய்யின் வாகனம் மட்டும் சிக்னலை மதிக்காமல் அங்கு இருந்து சென்று உள்ளது. இதனிடையே, விஜய்யின் கார் போக்குவரத்து விதிகளை மீறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனையடுத்து விஜய்யின் கார் மீது அபராதம் விதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், விஜய்யின் கார் போக்குவரத்து சிக்னலை மீறியதாக சென்னை போக்குவரத்து காவல் துறை 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் விஜய் போக்குவரத்து விதிகளை மீறி கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2026 சட்டப்பேரவைத்தேர்தல்.. பனையூரில் குவிந்த நிர்வாகிகள்... விஜயின் அடுத்த மூவ் என்ன?
நடிகர் விஜய் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களும் கடைசியில் சர்ச்சையிலேயே முடிவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ’நா ரெடி தான் வரவா’ பாடலில் விஜய் வாயில் சிகரெட் வைத்திருப்பது போன்ற காட்சிகள் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, இளைஞர்களை கெடுக்கும் வகையில் விஜய் நடிப்பதாகக் கூறி சர்ச்சை ஏற்பட்டு, பின்னர் பாடலில் ‘புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு’ என்ற வாசகம் போடப்பட்டது. அதே போன்று கடந்த மாதம், 2022 - 2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார்.
இந்த நிகழ்வில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோர் பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என விஜய் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. மேலும், இன்றும் பிற மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்திக்க உள்ளார்.
இதையும் படிங்க: புது கெட்டப்பில் சிம்பிளாக வந்த விஜய்! நிர்வாகிகளுக்கு கூறிய அட்வைஸ் என்ன..?