சென்னை: தமிழ் சினிமாவில் பல்வேறு உச்ச காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் பாவா லட்சுமணன். இவர் நீரிழிவு நோயால் கால் கட்டைவிரல் அகற்றப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். சரத்குமார் நடித்த மாயி படத்தில் 'வாம்மா மின்னலு' என்ற வசனத்தின் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர்.
யாருக்காவது ஜாமின் கிடைக்கவில்லை என்றால் கூட 'வாளமீன் இருக்குங்குறாங்க வஞ்சிர மீன் இருக்குங்குறாங்க. ஆனா, ஜாமீன் மட்டும் இல்லைங்குறாங்க' என்ற இவரது காமெடியைத்தான் மீம்ஸாக நெட்டிசன்கள் வைரலாக்குவார்கள். அதேபோல், அரசு படத்தில் குடிகாரன் வேடத்தில் வந்து குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் பாவா லட்சுமணன்.
சமீபகாலமாகப் படங்களில் தலைக்காட்டாமல் இருந்த இவர் தற்போது, நீரிழிவு நோயினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார். சில வருடங்களாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டும், அதனை முறையாக கட்டுப்படுத்த தவறியதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காயம் அதிகமாகி விட்டதன் காரணமாக பாவா லட்சுமணன் இடது கால் கட்ட விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
காமெடி வேடங்களில் நடித்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கலைஞன் இப்படி கஷ்டத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் என இணையத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து அண்மையில் பேட்டி ஒன்றில், "உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆனதுடன் நான் இறந்துவிட்டதாக கூறி போஸ்டரெல்லாம் ஒட்டப்பட்டது வேதனையாக இருந்தது எனத் தெரிவித்தார். தனக்கு இப்படி ஆனது தெரிந்ததும், பல நடிகர்கள் நலம் விசாரித்ததாக கூறிய பாவா லட்சுமணன், வடிவேலு பேசவில்லை எனவும் வருத்தப்பட்டு கூறியிருந்தார். சுகர் மாத்திரை கூட வாங்க முடியாத சூழலில் தான் இருந்தேன்" எனவும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும் லட்சுமணனை திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தும் அவருக்கு நிதி உதவியும் செய்திருக்கிறார். இதை பற்றி நடிகர் தாடி பாலாஜி கூறுகையில், "எங்கள் கலைத்துறையின் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் அண்ணன் பாவா லட்சுமணன் அவர்களுடைய உடல் நிலை பாதிப்பு குறித்து எனக்கு தெரிந்ததும் மிகவும் வருந்தினேன். தற்போது நேரில் சென்று உடல் நலம் பற்றி மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகளையும் கேட்டறிந்து எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னைத் தொடர் கொள்ளும்படி பாவா லட்சுமணனிடம் கூறி இருக்கிறேன்" என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாவா லட்சுமணனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.