நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரித்திருந்த நடிகர் சூர்யா, நீதிமன்ற செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்திருந்தார். இதற்கு மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் ஆதரவு கிடைத்திருந்தது.
இதனிடையே நீதிமன்றம் குறித்து பேசியது வழக்கறிஞர்கள், வலதுசாரி அரசியல் தரப்பினர் ஆகியோர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சூர்யாவுக்கு எதிர்ப்பு :
இது தொடர்பாக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் கொடுத்துள்ள கடிதத்தில், ”நடிகர் சூர்யாவின் கருத்து, நீதிமன்றத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நீட் தேர்வு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சினிமா பட வசனங்கள்போல் தனது கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றத்தை விமர்சித்துள்ளார். கரோனா காலத்திலும் தடங்கல் இல்லாமல் வழக்குகளை விசாரித்து பல தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் கருத்து தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம் என்பதற்காக நீதிபதிகளையும் நீதிமன்ற செயல்பாடுகளையும் விமர்சிக்க முடியாது.
அவதூறு பரப்பும் வகையில் பேசிய அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அதன் தலைவர் எஸ்.பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவுக்கு ஆதரவு :
அதேபோல் 25 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”நீதிமன்றத்தின் தற்போதைய செயல்பாடு குறித்துதான் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். அவதூறாக எந்தக் கருத்தையும் திணித்து கூறவில்லை.
சூர்யா மீது அவதூறு வழக்கு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் யாரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் அடிப்படைக் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும்.
நடிகர் சூர்யாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கு சமம்” என மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுதா ராமலிங்கம் உள்ளிட்ட 25 வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களும் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்' - காணொலி வெளியிட்ட சூர்யா