சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்து செய்திகளை பகிர்ந்துவருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் தவப்புதல்வர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அவர் நினைவுகளை போற்றும் இந்த நன்நாளில் கருணாநிதியை, இறுதியாக 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று சந்தித்த தருணம் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
கருணாநிதி நினைவு இழந்து படுக்கையில் இருந்த தருவாயில், நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது தமிழும், செல்வியும் என்னை அவரிடம் அழைத்து சென்று “சிவகுமார் அண்ணன் வந்திருக்கார் பாருங்க” என்று கூறினார்கள். அவர் முகம் எந்த வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை.
அப்போது, தமிழருவி மணியனுடைய “ சிவாஜி எனும் தவப்புதல்வன்” புத்தகம் எழுந்தியிருந்தார். அதில் இடம்பெற்ற மனோகரா படத்தின் தர்பார் காட்சியை டி.வி யில் போட்டு, அவர் அருகில் சத்தம் அதிகமாக வைத்து அவரை அதை கேட்கவைக்கலாம் என யோசித்தோம். அந்த காட்சியை போட, அதன் வசனம் “புருசோத்தமரே புரட்டு காலின் இருட்டு மொழியிலே “ என தொடங்கும் நீளமான அந்த உணர்ச்சிகரமான வசனத்தை 1.30 நிமிடம் போட்டோம்.
அவர் அருகே சென்று பார்த்தோம் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, நான் அருகில் சென்று பார்த்தேன். மூக்கு விடைக்கல.. உதடு துடிக்கல.. ஆனால் கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவரை கடைசியா பார்த்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருணாநிதியின் சிலைக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை