சென்னை: தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகராக சிறந்து விளங்குபவர் செந்தில். இவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். செந்தில் - கவுண்டமணி காம்போவில் உருவான நகைச்சுவைக்கு ஈடுஇணை எதுவுமே இல்லை என்று கூறுவர்.
இவர் படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி அரசியலிலும் தீவிரம்காட்டி வருகிறார். முதலில் அதிமுகவில் இருந்த இவர், சில நாள்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். மேலும் பாஜகாவிற்காக பரப்புரைகளும் செய்துள்ளார்.
ஏமாற்றிய புரொடெக்ஷன் மேனேஜர்
செந்திலுக்கு சாலிகிராமம் பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி வீடு உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு செந்தில் தனது வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த சினிமாவில் புரொடெக்ஷன் மேனேஜராகப் பணியாற்றி வந்த சகாயராஜ் என்பவருக்கு மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வாடகைக்கு கொடுத்ததாகவும், அதை சகாயராஜ் சர்வீஸ் அப்பார்ட்மென்ட் ஆக மாற்றி நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சகாயராஜ், நடிகர் செந்திலுக்கு முறையாக வாடகை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகம் அடைந்த செந்தில், தனது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவரது வீட்டை சகாயராஜ் தனக்குச் சொந்தமான வீடு எனக்கூறி ஏழு குடும்பத்தினரிடம் குத்தகைக்கும், வாடகைக்கும் விட்டுப் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக நடிகர் செந்தில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் 2019ஆம் ஆண்டு சகாயராஜை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
வாடகைதாரர்கள் மீது புகார்
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் செந்தில் தனது வீட்டின் ஒரு பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக அங்கு சென்றபோது, அவரைத் தடுத்த அங்குள்ள வாடகைதாரர்கள் அவரிடம் தாங்கள் அளித்த குத்தகை மற்றும் வாடகைப்பணத்தைக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து நடிகர் செந்தில் தனது வீட்டில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளவிடாமல் தடுக்கும் வாடகைதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது வீட்டை மீட்டுத்தருமாறு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர்களைத் தாக்கிய திருடர்கள் மீது வழக்குப்பதிவு