நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி இன்று (ஜூலை 21) சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் மரியாதை செலுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி. சேகர் கூறுகையில், "திமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்கிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாள்கள்வரை வைக்க வேண்டாம் என இருக்கிறோம்.
எந்த ஒரு அரசும் வந்தவுடன் அவர்களது செயல்பாட்டைத் தொடங்குவார்கள். ஆனால், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கரோனாவை ஒழிப்பதிலேயே முழு தீவிரம் காட்டியது. அவர்களால் மற்ற துறைகளில் கவனம் செலுத்த முடியாது. ஒரு சமயத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும்.
நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்படும் அரசை நாள்தோறும் விமர்சனம் செய்வது வெற்று அரசியலாகப் பார்க்கிறேன்" என்றார்.
திமுக அரசை தமிழ்நாடு பாஜகவின் முக்கியத் தலைவர்கள் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் பாராட்டியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.