சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்து வரும் நபர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
மேலும், 6.35 கோடி ரூபாய் பணம், 1.13 கோடி ரூபாய் மதிப்புமிக்க தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், 22 கார்கள், 96 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கணக்கு முடக்கம் மற்றும் 103 அசையா சொத்துக்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்யும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால், அவரை நேரில் ஆஜராகக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஆர்.கே சுரேஷிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆர்.கே சுரேஷின் வங்கிக் கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடக்கி உள்ளனர்.
முறைகேடான பணப் பரிவர்த்தனை ஏதும் நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வங்கிக் கணக்கை முடக்கி இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் - ஐஜி ஆசியம்மாள் அதிரடி பேட்டி!