கடந்த 2000ஆம் ஆண்டில் சந்தன கடத்தல் வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க காவிரியில் இருந்து 250 டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும். பெங்களூரில் திருவள்ளுர் சிலை நிறுவ வேண்டும், சிறையில் இருந்து தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வீரப்பன் ஆடியோ கேசட்டுகளை அனுப்பி வைத்தார்.
இச்சம்பவத்தில் 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, மூன்று பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் இறந்து போக ஒருவர் தலை மறைவாகிய நிலையில் மீதமுள்ள மாறன் உள்ளிட்ட 9 பேர் மீதான விசாரணை நடத்திய கோபிசெட்டிப்பாளைய நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த விடுதலையை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப் குமார் ஆஜராகி, நடிகர் ராஜ்குமார் உட்பட நான்கு பேர் கடத்தப்பட்டனர். இதில் மூன்று பேர் அரசுக்கு ஆதரவாக சாட்சி அளித்துள்ளனர். மேலும் கடத்தல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் சாட்சி அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கைது செய்யப்பட்டவர்களும் ஒப்புதல் சாட்சி அளித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து கை துப்பாக்கி, கையெறி குண்டுகள், வீடியோ கேசட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது குற்றத்திற்கான முகாந்திரம் உள்ளது. இதை கவனித்து கொள்ளாமல் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அடையாள அணி வகுப்பில் கூட பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளதாக வாதம் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 9 பேர் விடுதலையை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரனைக்கு ஏற்றுக் கொள்வதாக அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.