சென்னை: சென்னை கிண்டியிலுள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவிற்கு கருணாநிதி ஆற்றிய பங்கைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ் சினிமாவில் உள்ள 24 சங்கங்களும் இணைந்து இந்த பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திரைப்பிரபலங்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சியில், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறும் போது, "கருணாநிதியின் உடன் பிறப்புகளே என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே முதலமைச்சர் கருணாநிதி 1974ஆம் ஆண்டு முதல் எனக்குத் தெரியும். கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசப் போகிறார் என கூறிச் சென்றனர். இப்போது பேசுவதைப் போல் அப்போதும் பேசுவார். நிகழ்ச்சி முடிந்து அரசியல் குறித்தே தன் நண்பர்களுடன் பேசிச் செல்வார்.
கருணாநிதி குறித்துப் பேசச் சொன்னால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது எனத் எனக்குத் தெரியாது. அந்தளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான். எஸ்.பி.ராம யூனிட் என்றாலே அது மு.க.கட்சிதான் எனக் கூறுவார்கள் அந்த அளவிற்குக் கருணாநிதி குறித்துப் பேசிக்கொண்டே இருப்பார்.
சிவாஜியே ஒரே நாளில் ஸ்டார் ஆக்கினார். எம்.ஜி.ஆரையும் ஸ்டார் ஆக்கினார். ஆடம்பரத்திற்கு அவர் என்று சென்றதே இல்லை. கருணாநிதி அரசியலுக்குச் செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்.ஜி.ஆரை உருவாகி இருப்பார். எழுத்து, பேச்சு இரண்டு கைகூடி இருந்தது. எழுத்து இல்லையென்றால் புராணங்கள், கதைகள், கவிதைகள், அரசு, அரசாங்கம் எதுவுமே இல்லை. அத்தகைய எழுத்து அவருக்குக் கைகூடி இருந்தது. நெஞ்சுக்கு நீதி, முரசொலி என ஏராளமாக எழுதி உள்ளார்.
முரசொலியில் எழுதிய சில கடிதங்களைப் படித்தால் கண்ணில் கண்ணீர் வரும். சிலவற்றைப் படித்தால் கண்களில் நெருப்பு வரும். சிலர் பேசினால் எப்போது பேசி முடிப்பார்களோ எனத் தோன்றும் ஆனால், கருணாநிதி பேச ஆரம்பித்தால் விரைந்து முடித்துருவாரோ எனத் தோன்றும். பாமர மக்களுடன் பேசினால் பாமரர்களை விடப் பாமரர்களாகவும், அறிஞர்கள் உள்ள அவையில் பேசினால் அறிஞர்களைவிட அறிஞர்களாகப் பேசுவார்.
ஒரு படத்தில் அவர் எனக்கு வசனம் எழுதிய போது எனக்கு அவர் பேச முடியாது எனத் தோன்றி அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு அவர் நான் சிவாஜிக்கு ஒரு மாதிரியும், எனக்கு ஒரு மாதிரியும் எழுதுவேன் எனக்குக் கூறினார். ஆனால் உங்களின் எழுத்தை மாற்ற முடியாதோ எனக் கூறிய போது. அது என்ன திருக்குறளா மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
சாய்பாபாவைப் பார்க்க அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால், நாத்திகரான கருணாநிதி காண சாய்பாபா வந்தார். அப்போது நான் அவரிடம் கூறினேன் சார் உங்களுக்குத் தான் கடவுளைப் பிடிக்காது ஆனால் கடவுளுக்கு உங்களைப் பிடிக்கும். கருணாநிதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய விஷயம். அவருடன் பேசியது மிகப்பெரிய மகிழ்ச்சி. மு.க.ஸ்டாலின் அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் அதுதான் முக்கியம். மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்கள் வாழ்ந்து தனது உடல் நலத்தைப் பார்த்துக்கொண்டு மக்களுக்குச் சேவை செய்து அவரது தந்தையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக.. என்றுக்கூறும் துணிச்சல் கருணாநிதிக்கு இருந்தது -கமல்ஹாசன்!