சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) இன்று (பிப்.19) அதிகாலை மாரடைப்பால் காலமானார். நேற்றிரவு வண்டலூர் அருகே மேலக்கோட்டையூர் சிவன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி சாமி தரிசனம் செய்துவிட்டு, வீடு திரும்பிய போது மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், "எனது இயக்கத்தில் மயில்சாமி நடித்துள்ளார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய நபர்.
சிறு வயதில் இறந்துவிட்டார். தவறு நடந்துவிட்டால் சங்கமாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் நேரடியாக சொல்வார். அவருடைய இடத்தை யார் நிரப்புவார்கள் என தெரியவில்லை. அவரது குழந்தைகள் சிறிய வயதில் உள்ளனர். தந்தை ஸ்தானத்தில் இருந்து அவர்களை நாங்கள் அரவணைப்போம்" என தெரிவித்தார்.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரேஸ் கருணாஸ், "மயில்சாமி அண்ணனை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் எப்படி என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். எங்களுடைய அனைத்து சொந்த தயாரிப்பு படங்களிலும் அவர் இருப்பார். விருகம்பாக்கம் மக்கள் மயில்சாமியின் பிரிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு மழை, வெள்ளத்திலும் இங்குள்ள மக்களுக்கு அவர் உதவியது அதிகம்" என கூறினார்.
இதையும் படிங்க: நடிகர் மயில்சாமி மறைவுக்கு பல்வேறு திரைத்துறையினர் அஞ்சலி!