சென்னை: அறிந்தும் அறியாமலும், டெடி, சார்பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்யா. இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இலங்கையைப் பூர்விகமாக கொண்டு ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழும் வித்ஜா என்ற பெண் குடியரசு தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் ஆர்யா மீது மோசடிப் புகார் ஒன்றை அளித்தார்.
ரூ.70 லட்சம் மோசடி
அந்தப் புகாரில், நடிகர் ஆர்யாவுடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது எனவும், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கரோனா காரணமாக பணக்கஷ்டத்தில் இருப்பதாக கூறி தன்னிடம் 70 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுகொண்டதாகவும், இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தை திருப்பி தராமலும் நடிகர் ஆர்யா ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ஆர்யாவிடம் முறையிட்டால் மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். நடிகர் ஆர்யாவுக்கு அனுப்பிய பணபரிவர்த்தனைகள், மெசெஜ் உள்ளிட்ட ஆதாரங்களை இணைத்து அனுப்பியிருந்தார்.
விசாரணைக்கு ஆஜரான ஆர்யா
இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என விசாரணை செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு வழக்கானது மாற்றப்பட்டது. மேலும், வெளிநாட்டு பெண் புகார் என்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி வித்ஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது வருகிற 17ஆம் தேதி வரவுள்ளது.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவலர்கள் அனுப்பிய சம்மன் அடிப்படையில் நடிகர் ஆர்யா, இன்று மாலை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரனார்.
பணப்பரிவர்த்தனை ஆதாரங்களை வித்ஜா இணைத்துள்ளதால் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கீதா, நடிகர் ஆர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
மேலும், நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியது உண்மையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் அளித்த வித்ஜாவிற்கும் சம்மன் அனுப்பி தனிதனியாக விசாரணை நடத்த சைபர் கிரைம் காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் ஆர்யா ஏமாற்றியதாக ஜெர்மனி பெண் புகார் அளித்த விவகாரம்: மேனேஜர் அர்மான் முன் ஜாமீன் மனு