சென்னை: தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டடங்களின் மதிப்பீடு தயார் செய்வதற்குரிய கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தினக்கூலிகள் அடங்கிய பொதுப்பணித்துறை விலை விவர பட்டியலை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு துறைகளில் கட்டுமான சாலை பணிகள் நடைபெற்று வருவதாகவும், நெடுஞ்சாலைத்துறை விரைந்து செயல்பட்டால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும் என முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றும், தரமான சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதில் தவறில்லை என்றும், ஆனால் அங்கு நடைபெற்ற போராட்டம் ஜனநாயக போராட்டம் அல்ல எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவிக்கு நியாயம் கேட்பதற்கு 3000க்கும் அதிகமான மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டதும் ஆய்வகங்கள் உடைக்கப்பட்டதும் நியாயமா என்றும் கேள்வி எழுப்பினார்.
அதே பள்ளியிலேயே படிப்பை தொடர மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளதாகவும், அந்த மனுக்கள் அனைத்தும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும், மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் விட்டு வைக்க மாட்டோம் என உறுதியளித்த அவர், அவர்கள் மீது 100 சதவீதம் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கிடையாது! - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்