மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களுடன் ஆலோசனையில் இன்று (ஆகஸ்ட் 03) ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் மற்றும் தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்தக் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூறுகையில், ”புதிய கல்விக் கொள்கை மற்றும் ஆன்லைன் வழிகல்வித் திட்டம் ஆகியவை குறித்து இன்று நடக்கும் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய முடிவை எடுப்பார். மேலும், தனியார் பள்ளிகள் கட்டணங்களை கேட்டு பெற்றோருக்கு தொந்தரவு தரக்கூடாது, மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கும் திட்டம் இன்று (ஆக.3) தொடங்குகிறது. 10 தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக பாடங்கள் நடத்தப்படும். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலம் பாடம் நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் - தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!