சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் புத்தாக்கம் அலுவலராக (Innovation Officer) அழகு பாண்டிய ராஜா பணியாற்றி வருகிறார்.
31 வயதே ஆன அழகு பாண்டிய ராஜா சென்னை மாநகராட்சியின் புத்தாக்கம் அலுவலராக ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் முதலில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்தார். அதற்கு பிறகு மத்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். மத்திய அமைச்சகத்தில் பணியாற்றும்போது சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்களுக்கு உதவியாக இருந்துள்ளார். தற்போது அவர் சென்னை மாநகராட்சி புத்தாக்கம் அலுவலராக (Innovation Officer) புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.
கரோனா கண்காணிப்பு செயலி
கிட்டத்தட்ட ஜனவரி மாதம் இவர் பொறுப்பேற்று கொண்டபோது கரோனா உச்சத்தில் இருந்தது. அப்போது அழகு பாண்டிய ராஜா தனது முழு கவனத்தையும் கரோனா தொற்ளை கட்டுப்படுத்துவதில் செலுத்தினார். கரோனா பரவலை கண்காணிக்க கரோனா கண்காணிப்பு (GCC Corona Monitoring App) என்ற செயலியை இவர் வடிவமைத்தார். இந்த செயலியை பிளே ஸ்டோரில் இருந்து கிட்டத்தட்ட 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அடுத்தபடியாக கரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்கவும், தனிமைப்படுத்துதலை மேலாண்மை செய்யவும் ஒரு செயலியை உருவாக்கினார்.
தடுப்பூசி முன்பதிவு
அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சியில் இருக்கும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி முன்பதிவு செய்யவும், எந்த மையத்தில் என்ன தடுப்பூசி உள்ளது என தெரிந்து கொள்ள gccvaccine.in என்ற இணையதளத்தையும் உருவாக்கினார்.
மாநகராட்சி பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் (memorandum of understanding) மூலம் சமூக பிரச்னைகளை தீர்வுக்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். புத்தாக்கம் மையம் (innovation hub) நடத்தி வருகிறோம். அதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாநகராட்சி பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநகராட்சியில் உள்ள பிரச்னைக்கு தீர்வு செய்ய திட்டம் இருந்தால் அரசு சாராத அமைப்பு (NGO) அல்லது புது நிறுவனமோ அல்லது கல்லூரியில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களோ எங்களை அணுகலாம். நாங்கள் அந்த திட்டத்தை ஆராய்ந்த பிறகு அது நல்ல திட்டம் என்றால் எங்களால் முடிந்த உதவியை செய்வோம். உதாரணமாக தரவு பகிர்வு செய்வது, மாநகராட்சி முக்கிய இணையதளத்திற்குள் நுழைய அனுமதி அளிப்பது (access) போன்றவை செய்வோம்.
பல்வேறு புதிய திட்டம்
கரோனா தவிர்த்து வீடு இல்லாத நபர்களை பராமரிப்பது தொடர்பான திட்டம், கொசுவை கட்டுப்படுத்த திட்டம் (மலேரியா, டெங்கு கட்டுப்படுத்துவது தொடர்பாக), போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான திட்டம் என பல்வேறு புதிய திட்டத்திற்காக நிறுவனங்கள் எங்களை அணுகி வருகின்றன. அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சியில் செயல்படுத்திய திட்டத்தை வேறு மாவட்டத்தில் செயல்படுத்த எங்களை அந்த மாவட்ட அலுவலர்கள் அணுகினார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவி செய்வோம். மதுரையில் இருந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தனியாக மாநகராட்சிக்கு இருப்பது போல இணையதளம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நாங்கள் அதற்கான உதவியை செய்தோம். இதே போல் செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருந்து கோரிக்கை வருகிறது.
உலகின் முக்கிய பொருளாதார மையம்
சென்னை உலகின் முக்கிய பொருளாதார மையமாக மாறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன. இருப்பினும் அவற்றுக்கு தேவையான சில அடிப்படை பணிகளை நாங்கள் மேற்கொள்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முக்கிய வழக்குகளை தமிழ்நாட்டுக்கு வெளியே மாற்ற அடுத்தடுத்த கோரிக்கைகள்... காரணம் என்ன?