சென்னை: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், ஊரடங்கில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையை நீக்க மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் ரவிச்சந்திரன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை நேர்காணல் கண்டுள்ளார். அந்த நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம்.
சென்னையில் அதிகரிக்கும் கரோனாத் தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் மீறுகின்றனர். இதனை கட்டுப்படுத்தப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ?
ஊரடங்கை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஏற்கனவே அரசு அறிவித்துள்ளப்படி காய்கறிக் கடைகள், அத்தியாவசியப் பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகள் மட்டும் 12 மணி வரையில் செயல்படலாம் என்ற விதிமுறைகளை வியாபாரிகள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். மேலும், வியாபாரிகள் தங்கள் கடைகளில் அதிகளவில் கூட்டத்தை சேர்க்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
பொதுமக்களும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். கூட்டம் கூட்டமாகவும் செல்கின்றனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துவதற்கு காவல் துறையையும், மாநகராட்சியையும் இணைந்து 15 குழுக்களை அமைத்தோம். அது, தற்பொழுது 30 குழுக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்ஸிஜன் படுக்கை வசதி தேவை அதிகரித்துள்ளது. அதனை சமாளிக்க மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிப்பதற்கு அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் 300 ஆக்ஸிஜன் கருவிகளை பெரு நகர சென்னை மாநகராட்சிக்கு அளித்தார். அவற்றை சென்னை மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கிண்டி கராேனா மருத்துவமனைகளுக்கு அளித்துள்ளோம். அங்குள்ள ஆக்ஸிஜன் இல்லாத படுக்கைகளில் அதனைப் பொருத்தினால் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றப்படும்.
மேலும், 2,943 ஆக்ஸிஜன் கருவிகளை வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கருவிகள் படிப்படியாக வரும்போது மருத்துவக் கல்லூரிக்கு அளிப்போம். சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 50 படுக்கைகளில் ஆக்ஸிஜன் கருவிப் பொருத்தப்பட்டு தயார்படுத்தப்படுகிறது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுவரும் கரோனா சிகிச்சை மையத்திலும் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகிறோம். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நகர நல்வாழ்வு மையத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை எடுக்கக்கூடிய பெரிய முயற்சியில் மாநகராட்சியின் சிறிய பங்காக ஆக்ஸிஜன் படுக்கைகளை அளிக்கும் என்பதை கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களை பரிசோனை மையங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை களைய எடுத்த நடவடிக்கை என்ன?
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை மையங்களுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். முன்னர் 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டால் உடனடியாக வந்துவிடும். தற்பொழுது, ஏற்படும் தாமதத்தை தடுப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 150 கார் ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சென்னை மாநகராட்சி பரிசோதனை மையங்களில் விரைந்து செயல்படுவதற்காக கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க உள்ளோம்.
கரோனா தொற்று அறிகுறிகள் இருந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு வரும் நபர்களுக்கு அப்பொழுதே மருந்துகள் அடங்கிய கிட் கடந்த 2 நாட்களாக அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் இருக்கும்போதே மருந்துகளை சாப்பிட்டால் நோயின் தாக்கம் குறைந்து நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம்.
கரோனா தாெற்றால் யாரும் இறக்கக்கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, மயானங்களில் உடல்களை தகனம் செய்ய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை குறைக்க எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்பதுதான் எங்களின் ஆசையாக இருக்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மேலும் சிரமப்படுத்தக்கூடாது. மயானங்களுக்கு நேரில் சென்று நான் ஆய்வு செய்தேன். மண்டலங்களில் உள்ள அலுவலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில் தாமதம் இருக்கக் கூடாது. மக்களை கஷ்டமான நேரத்தில் மேலும் அவதிப்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கி உள்ளோம்.
மண்டல அலுவலர்களுக்கு எந்த இடத்திலும் ஊழல் இருக்க கூடாது எனவும், யார் ஊழலில் ஈடுப்பட்டாலும் அவர்களை உடனடியாக அங்கேயே பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். மண்டல அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு எந்தவிதமான சிரமமும் இருக்கக்கூடாது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக பொது மக்களுக்கு நீங்கள் விடுக்கும் வேண்டுகோள்?
கரோனா தொற்று மிகவும் மோசமான நோய் என்பதால் அதனை சதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே எப்போது வெளியில் சென்றாலும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீட்டிற்கு வந்த உடன் கைகளை கழுவிவிட்டு, குளித்து விடுங்கள். எத்தனை முறை வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தாலும் கைகளை கழுவிவிட்டு, குளித்துவிடுங்கள்.
முகக்கவசங்களை முறையாக அணிய வேண்டும். கரோனா அறிகுறிகள் தெரிந்தால், நமக்கு வராது எனவும், நான் வலுவாக இருக்கிறேன் எனவும் சிலர் நினைக்கின்றனர். மேலும் நாம் பரிசோதனைக்கு சென்றால் வீட்டின் வெளியில் மாநகராட்சி அலுவலர்கள் ஸ்டிக்கர் ஒட்டிவிடுவார்கள் என அஞ்சுகின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கையால் உங்களின் உடல்நலத்தை பாதிக்கவிடக்கூடாது. காய்ச்சல் வந்தால் நீங்கள் ஒரு மணி நேரத்தில் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஓரிரு நாட்கள் காலம் தாழ்த்தினால் வைரஸ் உங்கள் வாய், மூக்கு மூலம் நுரையீரலுக்கு சென்றுவிடும்.
தங்கள் குடும்பத்தை நேசிக்கும் மக்கள் குடும்பத்தின் மீது நேசம் காண்பிக்க வேண்டும் என்றால் அறிகுறி தெரிந்தால் உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். உடலலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் அளிக்கப்படுகிறது. கரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள் சென்றால் விரைவாக குணமடைவார்கள் என்பது எனது தனிப்பட்டக் கருத்து.
இதையும் படிங்க: ‘கரோனா இல்லாத 2022ஆம் ஆண்டிற்காக கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்’- மருத்துவர் ரெட்டி