சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச 18) விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் சில மாவட்டங்களின் சாலையில் மழை தண்ணீர் அதிக அளவில் சென்றுகொண்டு உள்ளது. இப்படியாகப் பெய்து வரும் கனமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாகத் தென் மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக, தென் மாவட்டங்களில் கனமழைக் காலத்திலும் தொடர்ந்து ஆவின் பால் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆவின் நிர்வாகம் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், "தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்குப் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதை ஒட்டி இந்த மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்குக் கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
மேலும், ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதலாகப் பால், பால் பொடி மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்கப் பால் போதுமான கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தென் மாவட்ட கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!