சென்னை:சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் கிண்டி தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத் தலைமை அலுவலகத்தில் வாரிய பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய அமைச்சர்,தோல் தொழிற்சாலைகள் மற்றும் சலவைத் தொழிற்சாலைகளுக்காக அமைக்கப்பட்ட பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கமடைந்துள்ள உப்புக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் விவசாயம்
“இராணிப்பேட்டையில் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ள குரோமிய கழிவுகளை பாதுகாப்பான முறையில் மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,பாலாற்றில் இரசாயன கழிவுகளை வெளியேற்றாமல் தடுக்க தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் ,சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் “எனவும் அறிவுரை வழங்கினார்.
மேலும்,நகரப் பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்தி வாழ்வதற்கு ஏற்ற பகுதிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர்,ஒன்றிய அரசு மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதலின்படி கோழிப்பண்ணைகள் வாரியத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக பொது மக்கள் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொழிற்பேட்டைகளில் காற்று மாசை குறைக்க மண் சார்ந்த நாட்டு மரங்கள் நடுவதற்கு தொழிற்சாலைகளை உக்குவிக்க வேண்டும் எனவும் ,அபாயகரமான தீங்கு விளைவிக்கும் கழிவுகளை சிமெண்ட் தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில்,சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர்,வாரியத்தின் தலைவர்,வாரிய உறுப்பினர் செயலர் ,தலைமை அலுவலக துறைத்தலைவர்கள் ,மாநிலம் முழுவதும் உள்ள இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு பிடிவாரண்ட்