சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் நகைக்கடன் பிரிவில், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி 31.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அதே வங்கியில் பணியாற்றிய முருகன் என்பவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சூர்யா, சந்தோஷ், பாலாஜி மற்றும் செந்தில்குமரன் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் கைதான சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில், கொள்ளை போன நகைகளில் 3.5 கிலோ நகைகள் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்ட காவல்துறையினர், கொள்ளையடித்த நகைகளை மறைத்து வைக்க உதவியாக இருந்ததாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அமல்ராஜ், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: அரும்பாக்கம் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது