சென்னை:தாம்பரம் காவல் ஆணையர் ரவி, நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு சமூக விரோதச் செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சுமுகமான முறையில் நடத்திடவும் தலைமறைவு குற்றவாளிகளைக் கண்காணித்து கைது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்பேரில் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தொடர் கண்காணிப்பிலும், ரவுடிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நடராஜன் என்கிற பாம் நடராஜன்(24) என்பவர் பெரும்பாக்கம் எழில் நகர்ப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அவரைப் பிடிக்க சென்றபோது பாம் நடராஜன் காவலர்களைக் கத்தியால் வெட்ட முயற்சித்துள்ளார். அப்போது தனிப்படை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் நடராஜனை கைது செய்தனர்.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் மீது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும்; இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பாம் நடராஜன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:Video Leak - லஞ்சம் வாங்கிய போலி உணவுத்துறை அலுவலர்!