சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை காவல் துறையினர் பலமுறை பல்வேறு வழக்குகளில் கைது செய்துள்ளனர்.
இருந்தபோதிலும், அவர் எளிதாக ஜாமீனில் வெளிவந்து விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் தலைமறைவாக இருந்து கொண்டு அவரது கூட்டாளிகளை வைத்து மாநகரில் பல்வேறு குற்றச் சம்பவங்களைச் செய்து வந்துள்ளார்.
புளியந்தோப்பு சரகத்தில் ஆற்காடு சுரேஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை காவல் துறையினர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது பெண் தோழியான அஞ்சலை என்பவரை பார்ப்பதற்கு சுரேஷ் வந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகாலை விரைந்த காவல் துறையினர், ஆற்காடு சுரேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவருடன் இருந்த அவரது கூட்டாளிகளையும், அஞ்சலையின் முதல் கணவரின் மகனான ரவுடி எழிலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விற்ற 2 பெண்கள் கைது - ஒருவர் தலைமறைவு!