சென்னை: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (32). இவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசில், பாலியல் வன்புணர்வு மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை லூதியானா போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவானார். இதனிடையே அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சி செய்துவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் லூதியானா போலீசார் தினேஷ் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்பு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொழும்புக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வரும், தலைமறைவு குற்றவாளி தினேஷ் குமார் இலங்கைக்கு தப்பிச் செல்வதற்காக இந்த விமானத்தில் பயணிக்க வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்த போது கம்ப்யூட்டரில், இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.
இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், தினேஷ்குமார் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை வெளியே விடாமல் பிடித்து, குடியுரிமை அலுவலக அறை ஒன்றில் அடைத்து வைத்து, பஞ்சாப் மாநில போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், தினேஷ் குமாரை கைது செய்து அழைத்து செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: வெடிப்பொருளுடன் விரட்டிய கும்பல்.. போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த இளைஞர்கள்..